போர் நேற்றே முடிவுக்கு வந்துவிட்டது - அமைதி ஒப்பந்தம் ஜூன் 19 முதல் அமல் - ஈரான் தகவல்!
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தம் வரும் ஜூன் 19-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரவுள்ளதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு தூதர்களுடனான சந்திப்பின் போது அரசுத் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட உரையில் அவர் இந்த முக்கிய விபரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அமெரிக்காவுடனான தற்போதைய போர்ச் சூழல் ஏற்கனவே முடிவுக்கு வந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த அடுத்தகட்ட மற்றும் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகள் வரும் ஜூன் 19 முதல் புதிய சுற்றில் தொடங்கும் என்று கூறினார்.

இந்த ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அதிகாரப்பூர்வமாக இரு நாடுகளாலும் கையெழுத்திடப்பட உள்ளது. இதில் அமெரிக்கா சார்பில் அந்நாட்டின் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸும், ஈரான் சார்பில் அதன் முதன்மைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாப்பும் கலந்துக் கொண்டு கையெழுத்திட உள்ளனர்.
இந்த அமைதி ஒப்பந்தத்தின் மிக முக்கியமான பகுதியாக அனைத்து முனைகளிலும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பது உள்ளடக்கப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சர், "அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஒரு தரப்பாகவும், ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பு மறுதரப்பாகவும் இந்த உடன்பாட்டில் உள்ளனர். எனவே, லெபனான் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல்கள் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும். லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அது இந்த சர்வதேச அமைதி ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறும் செயலாகக் கருதப்படும்."

இந்த ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான பாதையாகக் கருதப்படும் 'ஹார்முஸ் நீரிணை' வரும் வெள்ளிக்கிழமைக்குள் முழுமையாகத் திறக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் உறுதிப்படுத்தியுள்ளார். ஈரானின் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகள் தற்காலிகமாக நீக்கப்பட்டு, அமைதிக்கான வழிகள் எட்டப்பட்டு வருவதால் உலக நாடுகள் இந்த நகர்வை உற்றுநோக்கி வருகின்றன.
