மத்திய கிழக்கில் மலரும் அமைதி.. போரை முடிக்க அமெரிக்கா - ஈரான் 14 அம்ச ஒப்பந்தம்.. லிஸ்ட்ல என்னென்ன நிபந்தனை?!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த போரையும், உலகப் பொருளாதாரத்தை உலுக்கிய கடல் வழி முடக்கத்தையும் முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் 14 அம்சங்கள் அடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. பிரான்சில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டின் இடையே இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது.
அணு ஆயுதத் தயாரிப்பு மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டது. இதில் கத்தார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் நீண்ட தூதரகப் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்குப் பிறகு, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஜூன் 19 அன்று இந்த ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தாகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த ஒப்பந்தம் குறித்துப் பேசுகையில், "இது உலகளாவிய பொருளாதாரப் பெருமந்தத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளது; சந்தை தற்பொழுது இந்த முடிவை வரவேற்றுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள 14 அம்சக் கூட்டு அறிக்கையின் மிக முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளாக
1. போர் நிறுத்தம் மற்றும் ராணுவ வாபஸ்: லெபனான் உட்பட அனைத்து முன்னணிப் பாதுகாப்பு எல்லைகளிலும் இருதரப்பு மற்றும் அவற்றின் நட்பு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தப்படும். ஒப்பந்தம் கையெழுத்தான 30 நாட்களுக்குள் அமெரிக்கா தனது கடற்படைகளை ஈரானின் எல்லைப் பகுதிகளில் இருந்து முழுமையாக வாபஸ் பெறும்.
2. ரூ.25 இலட்சம் கோடி நிதி உதவி: போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஈரானின் உள்கட்டமைப்பு மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக, அமெரிக்கா தனது பிராந்திய கூட்டாளி நாடுகளுடன் இணைந்து குறைந்தது 300 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.25 இலட்சம் கோடிக்கும் அதிகம்) மதிப்பிலான நிதியுதவித் திட்டத்தை உருவாக்க ஒப்புக்கொண்டுள்ளது.

3. ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு மற்றும் கடற்படை முற்றுகை நீக்கம்: உலக அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா விதித்திருந்த கடற்படை முற்றுகை அடுத்த 30 நாட்களுக்குள் முழுமையாக நீக்கப்படும். வணிகக் கப்பல்கள் எவ்வித கட்டணமும் இன்றி அடுத்த 60 நாட்களுக்குப் பாதுகாப்பாகப் பயணிக்க ஈரான் வழிவகை செய்யும்.
4. அணுசக்தி கட்டுப்பாடு மற்றும் பொருளாதாரத் தடை நீக்கம்: ஈரான் தனது வசம் வைத்துள்ள 440 கிலோ அளவிலான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சர்வதேச அணுசக்தி முகமையின் மேற்பார்வையில் தரம் குறைத்து அழிக்கச் சம்மதித்துள்ளது. இதற்குப் பிரதிபலனாக, அமெரிக்க நிதி அமைச்சகம் ஈரானிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகள் மீதான தடைகளை உடனடியாக நீக்கி, அதற்கான சிறப்பு விலக்குகளை அளிக்கும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் லெபனானின் பிராந்திய ஒருமைப்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இந்த அமைதி உடன்படிக்கையை முழுமனதுடன் வரவேற்றுள்ளனர். இருப்பினும், இந்த 60 நாட்கள் தற்காலிக உடன்படிக்கையின் விதிகளை ஈரான் மீறினால், மீண்டும் அவர்கள் மீது குண்டுமழை பொழியப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
