மாதம் ரூ.42 முதலீடு - ஆயுள் முழுமைக்கும் ரூ.5,000 வரை ஓய்வூதியம்.. அசத்தலான திட்டம்!

 
பென்ஷன்

மத்திய அரசால் அமைப்புசாராத் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பிற்காகக் கொண்டு வரப்பட்ட ‘அடல் பென்ஷன் யோஜனா’  திட்டம், மிகக் குறைந்த முதலீட்டில் வாழ்நாள் முழுமைக்கும் நிலையான ஓய்வூதிய உத்தரவாதத்தை வழங்குகிறது. இத்திட்டம் ஓய்வூதியக் கட்டுப்பாட்டு மற்றும் மேம்பாட்டு வாரியத்தால் முறைப்படி நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட எந்தவொரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். விண்ணப்பதாரர் வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது.  உங்களது சேமிப்பு வங்கிக் கணக்கு அல்லது அஞ்சலக கணக்கு மூலமாக இத்திட்டத்தில் மிக எளிதாக இணைய முடியும். பிரீமியம் தொகை உங்களது கணக்கிலிருந்து தானியங்கிப் பற்று முறையில் எடுத்துக் கொள்ளப்படும்.

இத்திட்டத்தில் நீங்கள் இணையும் வயது மற்றும் நீங்கள் தேர்வு செய்யும் ஓய்வூதியத் தொகையைப் பொறுத்து மாதப் பிரீமியம் மாறுபடும். 60 வயதை எட்டியவுடன் மாதம் ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.5,000 வரை நிலையான ஓய்வூதியம் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். 18 வயதில் இத்திட்டத்தில் இணைந்தால், நீங்கள் மாதம் வெறும் ரூ.42 மட்டும் பிரீமியமாகச் செலுத்தினால் போதுமானது.

அதே 18 வயதில் இணையும் ஒரு நபர், மாதம் ரூ.210 பிரீமியம் செலுத்தி வந்தால் 60 வயதிற்குப் பிறகு வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.5,000 ஓய்வூதியமாகப் பெறலாம்.  நீங்கள் இணையும் வயது அதிகரிக்கும் போது பிரீமியம் தொகையும் அதிகரிக்கும். உதாரணமாக, 30 வயதில் இணையும் ஒருவர் ரூ.5,000 ஓய்வூதியம் பெற மாதம் ரூ.577 செலுத்த வேண்டியிருக்கும்.

இத்திட்டத்தில் முதலீடு செய்பவர் 60 வயதிற்குப் பிறகு துரதிர்ஷ்டவசமாக உயிரிழக்க நேரிட்டால், அவரது கணவர் அல்லது மனைவிக்கு அதே ஓய்வூதியத் தொகை தொடர்ந்து வழங்கப்படும். இருவருமே உயிரிழக்கும் பட்சத்தில், அவர்கள் சேர்த்த மொத்த ஓய்வூதியக் கூட்டுத்தொகை (Accumulated Corpus Fund - ரூ.5,000 ஓய்வூதியத் திட்டத்திற்கு அதிகபட்சமாக ரூ.8.5 லட்சம் வரை) அவர்களின் வாரிசுதாரரிடம் முழுமையாக ஒப்படைக்கப்படும். தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் சிறு தொழில் செய்வோருக்குத் தங்களது எதிர்காலப் பாதுகாப்பை உறுதி செய்ய இது ஒரு மிகச் சிறந்த சேமிப்புத் திட்டமாகும்.