ஈரானுடனான மோதலுக்கு இதுவரை ரூ.2.76 லட்சம் கோடி செலவு - பென்டகன் தகவல்!
கடந்த பிப்ரவரி 2026-ல் தொடங்கி, உலக நாடுகளைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள அமெரிக்கா - ஈரான் இடையிலான போர், தற்போது பொருளாதார ரீதியாகவும் அமெரிக்காவிற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் (Pentagon) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இந்தப் போருக்காக இதுவரை சுமார் 33 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.76 லட்சம் கோடி) செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் நிதித்துறைத் தலைவர் ஜூல்ஸ் ஹர்ஸ்ட் , நாடாளுமன்றக் குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு 25 பில்லியன் டாலராக இருந்த போர்ச் செலவு, தற்போது 33 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 'ஆபரேஷன் எபிக் பியூரி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் போர் நடவடிக்கையில் அதிநவீன ஏவுகணைகளின் பயன்பாடு, சேதமடைந்த போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்களைச் சரிசெய்தல், மத்திய கிழக்கு நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வீரர்களுக்கான பராமரிப்புச் செலவு.
ஆகியவை இந்தத் தொகையில் அடங்கும்.

பென்டகன் 33 பில்லியன் டாலர் என்று கூறினாலும், சில சுயாதீன ஆய்வு நிறுவனங்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள், இந்தப் போரின் உண்மையான செலவு 70 பில்லியன் டாலரை (ரூ.5.8 லட்சம் கோடி) தாண்டிவிட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர். பென்டகன் தரவுகளில் ஈரானால் தாக்கப்பட்ட அமெரிக்கத் தளங்களின் சீரமைப்புப் பணிகள் மற்றும் நவீன ஏவுகணைகளை மீண்டும் வாங்குவதற்கான நிதி முழுமையாகச் சேர்க்கப்படவில்லை என்பதே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
இந்தப் போரின் விளைவாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 195 டாலரைத் தொட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் பணவீக்கம் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது அதிபர் டிரம்பின் செல்வாக்கைப் பாதித்துள்ள நிலையில், போருக்கான நிதியைப் பெற நாடாளுமன்றத்தில் கூடுதல் பட்ஜெட்டைக் கோர பென்டகன் திட்டமிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தால் ஒரு தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், இன்னும் இரு நாடுகளுக்கும் இடையே நிரந்தர உடன்பாடு எட்டப்படவில்லை. ஈரான் தரப்பில் போரினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு கோரப்படுவதும், அமெரிக்கா தனது பிடிவாதத்தைக் குறைக்காததும் பதற்றத்தை இன்னும் நீட்டிக்கச் செய்துள்ளது.
ஆயுத வலிமையில் ஈரான் சிறிய நாடாகத் தெரிந்தாலும், அமெரிக்காவிற்கு இது ஒரு 'விலை உயர்ந்த' போராக மாறி வருகிறது. ஒருபுறம் உயிர்ப்பலிகள், மறுபுறம் லட்சக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு என இந்தப் போர் உலகப் பொருளாதாரத்தையே ஒரு நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளியுள்ளது.
