முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்!
முதலமைச்சர் விஜய்யின் சொந்த தொகுதியான சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த சில நாட்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொடுங்கையூர் மற்றும் எம்.கே.பி நகர் உள்ளிட்ட பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 6 நாட்களாகச் சீராகக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குடிநீர் வாரிய அதிகாரிகளின் தொடர் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், உடனடியாகத் தடையின்றித் தண்ணீர் வழங்க வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திடீர் மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விரைவில் குடிநீர் விநியோகம் முழுமையாகச் சீரமைக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக்கலைந்து சென்றனர்.
