இங்கிலாந்தில் புகைப்பிடிக்கத் தடை சட்டம் நிறைவேற்றம் - 2009-க்குப் பிறகு பிறந்தவர்கள் இனி வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாது!

 
சிகரெட் புகை சிகரெட் புகை

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று 'புகையிலை மற்றும் வேப்ஸ்' மசோதா இறுதி ஒப்புதல் பெற்று நிறைவேறியது. இதன் மூலம் வரும் காலங்களில் இங்கிலாந்தில் புகையிலை விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. 2009ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவருக்கும் சிகரெட் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இவர்களுக்கு வயது ஏறினாலும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் சட்டப்பூர்வமாகச் சிகரெட் வாங்க முடியாது.

தற்போதைய நிலையில் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்குச் சிகரெட் விற்பனை செய்யத் தடை உள்ளது. புதிய சட்டத்தின்படி, இந்த வயது வரம்பு ஆண்டுக்கு ஒருமுறை உயர்ந்து கொண்டே செல்லும். இதனால் ஒரு குறிப்பிட்ட தலைமுறைக்குப் பிறகு யாருமே சிகரெட் வாங்க முடியாத நிலை ஏற்படும்.

சிகரெட்

இளைஞர்களைக் கவரும் வகையில் விற்கப்படும் மிட்டாய் சுவை கொண்ட வேப்ஸ் மற்றும் அதன் வண்ணமயமான பேக்கேஜிங் முறைகளுக்கும் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் விளையாட்டு மைதானங்களுக்கு வெளியே புகைபிடிக்கவும், வேப் பயன்படுத்தவும் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் தடுக்கக்கூடிய இறப்புகளில் புகையிலை பயன்பாடு முதலிடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 80,000 பேர் இதனால் உயிரிழக்கின்றனர். "தடுப்பதே சிறந்தது" என்ற கொள்கையின் அடிப்படையில், தேசிய சுகாதார சேவையின் (NHS) சுமையைக் குறைக்கவும், வருங்காலத் தலைமுறையினரை அடிமைத்தனத்திலிருந்து பாதுகாக்கவும் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரச் செயலாளர் வெஸ் ஸ்டீரிட்டிங் தெரிவித்துள்ளார்.

புகை பெண் சிகரெட்

நியூசிலாந்து ஏற்கனவே இத்தகைய சட்டத்தைக் கொண்டு வந்து பின்னர் ரத்து செய்த நிலையில், இங்கிலாந்து இதனை உறுதியாக அமல்படுத்தியுள்ளது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த மசோதா அடுத்த வாரம் மன்னர் சார்லஸின் ஒப்புதலைப் பெற்று அதிகாரப்பூர்வச் சட்டமாக மாற உள்ளது.