நேபாள் வெள்ளத்தில் கதறும் மக்கள்: 105 இந்தியர்கள் உட்பட 400 பேரின் நிலை என்ன? - 384 பயணிகளுடன் தொடர்பு துண்டிப்பு!
நேபாள நாட்டின் திபெத் எல்லைக்கு அருகிலுள்ள ரசுவா, தாடிங் மற்றும் நுவாகோட் ஆகிய மாவட்டங்களில் போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தால் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
நேபாள சுற்றுலா வாரியத்தின் முதற்கட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, 291 வெளிநாட்டவர்கள் மற்றும் 93 நேபாள நாட்டவர்கள் என மொத்தம் 384 பேருடன் தொடர்பு கொள்ள முடியாமல் மாயமாகியுள்ளனர். காணாமல் போன வெளிநாட்டவர்களில் 105 பேர் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் என்றும், 37 பேர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக ரசுவாகதி எல்லை வழியாகச் சென்றவர்கள் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்கா, மலேசியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் இதில் அடங்குவர். இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், திமுரே மற்றும் ராசுவாகதி பகுதிகளில் பணியாற்றிய 26 போலிஸார் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூரில் மழை பெய்யாத நிலையில், திபெத் எல்லையில் ஏற்பட்ட பனிப்பாறை ஏரி உடைப்பு அல்லது நிலச்சரிவு காரணமாக ஆறு அடைபட்டு திடீரென உடைந்ததால் இந்தப் பெருவெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நேபாள ராணுவத்தின் 14 ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் ரசுவா, சியாப்ருபேசி உள்ளிட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

நேபாள சுற்றுலா வாரியம் அவசர உதவி எண்களை (டோல் ஃப்ரீ எண்: 1234, ஹாட் லைன்: 1144, சுற்றுலா போலீசார் உதவிஎண்: +977 9851289445) வெளியிட்டுள்ளது. தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ள பயணிகள் குறித்துப் பயண முகவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ந்து சரிபார்க்கப்பட்டு வருகிறது.
