"கவர்ச்சி அரசியலை நம்பி மக்கள் ஏமாந்துவிட்டனர்" - தவெக வெற்றியை விமர்சித்த இபிஎஸ்!
தேர்தலில் நிலவிய கவர்ச்சிகரமான மாயையான சூழலை நம்பி வாக்களித்ததால் தற்பொழுது மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்றுதஞ்சாவூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மைய தேர்தல் முடிவுகள் மற்றும் தற்போதைய தவெக அரசின் செயல்பாடுகள் குறித்துத் தனது விமர்சனங்களை முன்வைத்தார்.

தேர்தலில் தவெக பெற்ற வெற்றிக்கான காரணம் என்ன என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் வெளிப்படையாகவே தெரிகிறது. எனவே, அதன் பின்னணி குறித்து நாம் பெரிதாக ஆராயத் தேவையில்லை என்று கட்சி நிர்வாகிகளிடம் அவர் குறிப்பிட்டுள்ளார். தவெக பெற்றுள்ள இந்த வெற்றிக்கு வெறும் கவர்ச்சி அரசியல் மட்டுமே முக்கியக் காரணம் என்றும், மக்கள் மத்தியில் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட மாயையைத் தவிர இதில் வேறொன்றும் இல்லை என்றும் அவர் சாடியுள்ளார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 60 நாட்களைக் கடந்துள்ள நிலையில், தற்போதைய அரசியல் சூழல் குறித்து அவர் மேலும் பேசுகையில், "தேர்தல் சமயத்தில் காட்டப்பட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிகளையும், மாயைகளையும் நம்பி மக்கள் தவெகவிற்கு வாக்களித்துத் தற்பொழுது ஏமாந்து போய் நிற்கிறார்கள். நிர்வாகத்திறனற்ற இந்த ஆட்சியில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன."

தவெக எம்எல்ஏக்கள் மீதான குதிரைப்பேரப் புகார்கள், திமுகவுடனான அரசியல் மோதல்கள் எனத் தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் வேளையில், தவெகவின் வெற்றியை வெறும் "கவர்ச்சி அரசியல்" என இபிஎஸ் விமர்சித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
