சென்னை மக்களே உஷார்... அக்.10-ல் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!
சென்னையில் உள்ள நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, நகரின் முக்கியப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தில் அக்டோபர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் அக்டோபர் 11ஆம் தேதி காலை 9 மணி வரை அவசரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகள் காரணமாக அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 3 மண்டலங்களில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தடைபடும்.

திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் மற்றும் பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படும்.
குடிநீர் தடையைத் தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அளவு குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
அவசரத் தேவைகளுக்குச் சென்னை குடிநீர் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான (chennaimetrowater.tn.gov.in) மூலமாக முன்கூட்டியே முன்பதிவு செய்து, லாரி மூலம் குடிநீரைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
