“மக்கள் தேவையின்றி வெளியே வராதீங்க”.. கனமழை எதிரொலி - மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை.. புகார் எண்கள் அறிவிப்பு!
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை எதிரொலியாக, பொதுமக்கள் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மாநகராட்சி ஆணையர் சமீரன் அறிவுறுத்தியுள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழகக் கடற்கரைப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக, வரும் 26-ஆம் தேதி வரை அடுத்த 6 நாட்களுக்குத் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், வரும் 23-ஆம் தேதியன்று வங்கக்கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரவு முழுவதும் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன், சென்னையில் கனமழையை எதிர்கொள்ள அனைத்துப் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முழுவீச்சில் தயார்நிலையில் உள்ளன. சில பகுதிகளில் 10 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது.
பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும், மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் நிற்கவோ அல்லது புகைப்படம் எடுக்கவோ வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மழைநீர் தேக்கம், சாய்ந்த மரங்களை அகற்றுவது மற்றும் மின் தடை போன்ற புகார்கள் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு வருகின்றன. மணலி மற்றும் மாதவரம் பகுதிகளில் மழைநீர் தேக்கம் குறித்த புகார்கள் அதிகமாக வந்துள்ளன. மக்கள் மழை தொடர்பான எந்தவொரு உதவிக்கும் அல்லது புகார்களைத் தெரிவிக்கவும் 1913 என்ற கட்டணமில்லா உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
