கொட்டும் மழையில் காத்திருந்த மக்கள்.. ஆய்வு பணி முடித்து குடையுடன் வந்து கையசைத்த முதல்வர் விஜய்!

 
விஜய்

சென்னை கோயம்பேட்டில் உள்ள 45 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு  நிலையத்தின் செயல்பாடுகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதல்வர் விஜய் ஆய்வு

கோயம்பேடு மற்றும் கொடுங்கையூரில் செயல்படும் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் நாளொன்றுக்கு மொத்தம் 90 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உயர்தரத்தில் மறுசுழற்சி செய்யப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட மறுசுழற்சி நீர் தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் கான்கிரீட் தயாரிப்புப் பிரிவுகளுக்கு வழங்கப்படுவதால், தொழிற்சாலைகளுக்குப் பயன்பட்ட நன்னீர் தற்போது பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர் வளம் பாதுகாக்கப்படுவதோடு, சென்னை மாநகரின் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறனும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு

ஆய்வுப் பணியின் போது கோயம்பேடு பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மேம்பாலத்திற்கு அடியிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் திரளான பொதுமக்கள் முதலமைச்சரைக் காண்பதற்காகக் காத்திருந்தனர். இதனைத் அறிந்த முதலமைச்சர் விஜய், தனது காரில் இருந்து இறங்கி கையி்ல் குடையுடன் நேரில் வந்து காத்திருந்த மக்களை நோக்கி உற்சாகமாகக் கையசைத்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார். இந்த ஆய்வின் போது அரசு தலைமை கொறடா ரா.சபரிநாதன், நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் த.ஆனந்த் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.