உடல் முழுவதும் சேறு பூசி விநோத வழிபாட்டை வருடந்தோறும் பின்பற்றும் மக்கள்.. எங்கு தெரியுமா?
தமிழ்நாட்டில் கிராமப்புற கோயில்களில் நடைபெறும் திருவிழாக்கள் பல்வேறு பழக்கவழக்கங்கள் மற்றும் விசித்திரமான சடங்குகளுடன் பாரம்பரியமாக அனுசரிக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கீழக்குறிச்சிப்பட்டியில் உள்ள பொன்னழகி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெற்று வருகிறது.
இதில் கீழக்குறிச்சிபட்டி, செல்லியம்பட்டி, மேட்டாம்பட்டி, தேவன்பட்டி, கருப்புக்குடி, கொள்ளுப்பட்டி, அம்மன்கோவில்பட்டி, வார்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். பங்குனி திருவிழாவையொட்டி பொன்னழகி அம்மனுக்கு ஆடு, சேவல் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதைத்தொடர்ந்து நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சேற்று பூசும் நிகழ்ச்சி நடந்தது.
கோவில் அருகே உள்ள கண்மாயில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, நூற்றுக்கும் மேற்பட்டோர், சேற்றில் உருண்டு, உடலில் சேற்றை பூசினர். தொடர்ந்து அவர்கள் தலையில் மாலைகள் மற்றும் கோழி இறகுகள் அணிந்து சாமி ஆடியபடி அம்மன் கோயிலுக்குச் சென்றனர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இவ்வாறு வழிபட்டால் உடல் நலம் பெறுவதோடு, இப்பகுதிகளில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை. இந்த திருவிழா குடும்ப உறவுகளை மேம்படுத்தவும் விரும்பிய இலக்குகளை அடையவும் உதவும் என்றும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இது வினோதமாக இருந்தாலும் பாரம்பரிய முறைப்படி இந்த விழாவை கொண்டாடி வருவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!