"ரீல்ஸ் பார்த்து வாக்களித்த மக்கள் இப்போ வருந்துறாங்க" - மேயர் பிரியா!

 
பிரியா

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு பொறுப்பேற்றதற்குப் பின் முதல்முறையாகச் சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய சென்னை மேயர் ஆர்.பிரியா, தவெக அரசையும், முதலமைச்சர் விஜய்யையும் மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடினார். தேர்தல் தோல்விக்குப் பிறகு சென்னை மாமன்றத்தில் திமுகவின் முதல் அரசியல் அஸ்திரமாக மேயர் பிரியாவின் இந்தப் பேச்சு விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சென்னை மாமன்றக் கூட்டத்தில் தவெக அரசின் தற்போதைய செயல்பாடுகள் குறித்துப் பேசிய மேயர் பிரியா, இந்த அரசுக்கு எனத் தனித்துவமான திட்டங்கள் எதுவும் இல்லை என்று விமர்சித்தார். "கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களின் பெயர்களை மட்டும் மாற்றி, அவற்றை அப்படியே தொடர்ந்து செயல்படுத்தினால் மட்டுமே தற்போதைய அரசால் தங்களின் ஆட்சியை ஓட்ட முடியும் என்பதுதான் நிதர்சனமான உண்மை" என்று அவர் குறிப்பிட்டார்.

மேயர் பிரியா

சமூக வலைத்தளப் பிரசாரங்களை நம்பி மக்கள் வாக்களித்ததே தற்போதைய ஆட்சி மாற்றத்திற்குக் காரணம் என்று மேயர் பிரியா சுட்டிக்காட்டினார்.

"தேர்தல் சமயத்தில் சமூக வலைத்தளங்களில் வந்த ரீல்ஸ்களைப் பார்த்து ஏமாந்து வாக்களித்த மக்கள், 'ரியல்' ஆட்சியை, சிறந்த நிர்வாகத்தை இழந்து விட்டோமே என்று நினைத்துக் கடந்த சில நாட்களாகவே மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்."

"திமுகவின் இந்தத் தேர்தல் தோல்வி என்பது வெறும் தற்காலிகமானது மட்டும்தான். எங்களின் மக்கள் பணிகள் என்றும் ஓயாது. மிக விரைவில் திமுக மீண்டும் பிரம்மாண்டமாக வெற்றி பெற்று ஆட்சிப் பீடத்தில் அமரும்" என்று அவர் மாமன்றத்தில் சூளுரைத்தார்.