“ஓபிஎஸ் துரோகத்தை மக்கள் எப்போதும் மன்னிக்க மாட்டார்கள்” - கவுதமி
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த முடிவை, அதிமுக நிர்வாகியும் நடிகையுமான கவுதமி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஓ. பன்னீர்செல்வத்தின் இந்த அரசியல் நகர்வை "கோழைத்தனமான பிழைப்புவாதம்" என்று வர்ணித்துள்ளார். அவரது செயல்பாடுகள் ஜெயலலிதாவின் ஆன்மாவிற்கும், அதிமுக தொண்டர்களுக்கும் இழைக்கப்பட்ட மிகப்பெரிய ஏமாற்றம் என்று பதிவிட்டுள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு, அவரால் இரண்டு முறை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டவர் ஓபிஎஸ். ஆனால், இன்று அதே ஜெயலலிதாவைத் துன்புறுத்தியதாக அதிமுகவினரால் விமர்சிக்கப்படும் திமுகவில் ஓபிஎஸ் இணைந்திருப்பது, தன்னை உருவாக்கியவருக்கே அவர் செய்த துரோகம் என்று கவுதமி குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் சேவையை மறந்து, வெறும் பணத்திற்காகவும் பதவிக்காகவும் தனது சுயமரியாதையை ஓபிஎஸ் விற்றுவிட்டதாகவும், பணத்திற்காக மண்டியிட்டுக் கிடக்கிறார்" என்றும் கூறியுள்ளார்.
நேற்று வரை திமுகவை 'மக்கள் விரோத சக்தி' என்றும் 'அரசியல் ஆபத்து' என்றும் விமர்சித்து வந்த ஓபிஎஸ், இன்று அதே கட்சிக்கு அடிமையாகிவிட்டார். ஓபிஎஸ் இன்று எழுதியிருக்கும் இந்த "துரோக வரலாற்றை" தமிழக மக்களும் வரலாறும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும், ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் ஓபிஎஸ்-ன் பேராசையை இப்போது புரிந்து கொண்டிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
