படுபாதக ஆட்சியை ‘Blockbuster’ என மக்கள் கூற மாட்டார்கள் - நாதக விமர்சனம்
தமிழகத்தில் தற்போதைய தவெக அரசின் செயல்பாடுகள் மற்றும் விளம்பர உத்திகளைக் கடுமையாக விமர்சித்து, நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பாசறை தங்களின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் காரசாரமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசின் விளம்பரப் பிரசாரங்களை சினிமாப் படங்களோடு ஒப்பிட்டு, தவெக அரசை "ரீல்ஸ் போடும் அரசு" என்று நாதக மிகக் காட்டமாகச் சாடியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஐடி விங் வெளியிட்டுள்ள அந்த எக்ஸ் பதிவில், தவெக அரசு மக்கள் நலனை விடத் தங்களின் சுய விளம்பரங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. "தேர்தலில் வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடிப்பதற்காக வேண்டுமானால் நீங்கள் சமூக வலைத்தளங்களில் 'Reels' போட்டிருக்கலாம். ஆனால், ஆட்சியைப் பிடித்த பிறகும் கூட, மக்கள் பணிகளைச் செய்யாமல் வெறும் 'Reels' மட்டுமே போட்டுக் கொண்டிருந்தால் அது நன்றாகவா இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தற்போதைய தவெக அரசின் செயல்பாடு மிகவும் சுமாருக்குக் கீழான ஒரு படுபாதக ஆட்சியாக உருவெடுத்துள்ளது என்றும் அக்கட்சி விமர்சித்துள்ளது. சினிமா ரசிகர்களின் மனநிலையை வைத்து அரசியலை நகர்த்த வேண்டாம் என்று தவெக தலைமைக்கு நாதக அறிவுறுத்தியுள்ளது.
"திரைத்துறையில் படுதோல்வி அடைந்த 'சுறா' போன்ற ஒரு மொக்கைப் படத்தைக் கூட, தங்களின் அபிமான நடிகர் நடித்தார் என்பதற்காக 'Super' என்று சொல்லுமளவுக்கு உங்களுக்குக் குருட்டுத்தனமான ரசிகர்கள் இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அப்படிப்பட்ட ரசிக மனப்பான்மையிலேயே எப்போதும் மூழ்கிக் கிடக்க மாட்டார்கள்."
அரசின் இந்த மோசமான நிர்வாகத்தை, சினிமா பாணியில் 'Blockbuster' என்று பாராட்டுமளவுக்குத் தமிழ் மக்கள் ஏமாளிகள் அல்ல என்றும், தங்களின் படுபாதக ஆட்சியை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் நாம் தமிழர் கட்சி தனது எக்ஸ் பதிவில் அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளது. திமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகளில் உட்கட்சி விவகாரங்கள் தற்பொழுது புகைந்து வரும் வேளையில், தவெக அரசுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி தனது விமர்சனக் கணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
