ஆம்னி பேருந்து மீது கார் பயங்கர மோதல்! 4 பேர் பலி.. 3 பேர் தீவிர சிகிச்சை!
பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் அருகே ஆம்னி பேருந்தின் பின்புறம் கார் மோதிய விபத்தில் பெண் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது மனைவி சூர்யா மற்றும் நண்பர்கள் பிரபாகரன், காளீஸ்வரன், கண்ணதாசன், ஜான் கென்னடி, சரண்யா ஆகியோருடன் ராமநாதபுரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

திருமணம் முடிந்ததும் 7 பேரும் காரில் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளனர். காரை கண்ணதாசன் ஓட்டிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.அப்போது முன்னால் தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் பின்புறத்தில் கார் மோதியுள்ளது. மோதலில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பிரபாகரன் மற்றும் காளீஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் சிக்கியிருந்த மற்ற 5 பேரை மீட்டு பெரம்பலூர் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக் மற்றும் அவரது மனைவி சூர்யா ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.படுகாயமடைந்த கண்ணதாசன், ஜான் கென்னடி மற்றும் சரண்யா ஆகிய 3 பேருக்கும் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்தில் இருந்த 34 பயணிகளும் மாற்றுப் பேருந்து மூலம் சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆம்னி பேருந்து ஓட்டுநர் ராஜசீலன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
