12 வயது சிறுமியுடன் பழகிய கல்லூரி மாணவர் கொலை! தலைமறைவான தந்தைக்கு போலீஸ் தேடுதல்
பெரம்பலூர் மாவட்டத்தில் 12 வயது சிறுமியுடன் பழகிய விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், 21 வயது கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சிறுமியின் தந்தையைப் போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வெண்பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அபிமன்யூ (21). கல்லூரி மாணவரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியுடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் சிறுமியின் தந்தை பாலசுப்பிரமணியனுக்குத் தெரியவந்துள்ளது. இவர் அந்தக் கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆவார்.

இதையடுத்து, அபிமன்யூவுக்கும் பாலசுப்பிரமணியனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது பாலசுப்பிரமணியன் இரும்புக் கம்பியால் தாக்கியும், கத்தியால் குத்தியும் அபிமன்யூவை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள பாலசுப்பிரமணியனைத் தேடி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
