வகுப்பறையில் புத்தகப் பைகளை வைத்துவிட்டு பள்ளி மாணவியர் 2 பேர் மாயம்!
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிக்கு வந்த 9-ம் வகுப்பு மாணவியர் இருவர், தங்களது புத்தகப் பைகளை வகுப்பறையில் வைத்துவிட்டு வெளியே சென்ற நிலையில் மாயமாகியுள்ளனர். அவர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் வெங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த இரு மாணவியரும், சம்பவத்தன்று காலை வழக்கம்போல் பள்ளிக்குத் தங்களது புத்தகப் பைகளுடன் வந்துள்ளனர்.
காலை 8.30 மணியளவில் இருவரும் தங்களது புத்தகப் பைகளை வகுப்பறையில் வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளனர். பள்ளி தொடங்கும் நேரம் ஆகியும் அவர்கள் திரும்பி வராததால், ஆசிரியர்கள் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து, பள்ளி நிர்வாகம் சார்பில் அரும்பாவூர் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவியரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்
போலீசார் நடத்திய விசாரணையில், மாணவியர் இருவரும் பள்ளியிலிருந்து வெளியேறி அந்த வழியாக வந்த பேருந்தில் ஏறி பெரம்பலூர் சென்றது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.தொடர்ந்து, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைக்குச் சென்று தங்களது பள்ளிச் சீருடையை மாற்றியதும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்ததாகச் செய்தி தெரிவிக்கிறது.
அதன்பிறகு மாணவியர் எங்கு சென்றனர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்குச் சென்ற மாணவியர் இருவர், புத்தகப் பைகளை வகுப்பறையில் வைத்துவிட்டு மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
