சினிமாவை மிஞ்சிய கடத்தல்... பிரிந்து வாழ்ந்த மனைவியை காரில் தூக்கிய கணவர்!
பெரம்பலூர் அருகே கருத்து வேறுபாடு காரணமாகத் தனியாக வசித்து வந்த மனைவியைத் தனது நண்பர்களுடன் சேர்ந்து கணவரே கடத்திச் சென்ற துணிகரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தேனூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மற்றும் செல்வராணி தம்பதியினருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். பெருமாள் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு ஊர் திரும்பிய நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தொடர் சண்டையினால் செல்வராணி தனது இளைய மகளுடன் பெரம்பலூரில் தனியாக வசித்து வந்தார். இந்தச் சூழலில் தான், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இந்தக் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது.

பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த செல்வராணியைப் பெருமாள் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து வலுக்கட்டாயமாகத் தரதரவென இழுத்து காரில் ஏற்றியுள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மகள் கீர்த்தனா, தனது தாய் கடத்தப்படும் காட்சியைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, தனது தாயின் உயிருக்குத் தந்தை மற்றும் அவரது நண்பர்களால் ஆபத்து இருப்பதாகவும், அவரை மீட்டுத் தருமாறும் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பெரம்பலூர் போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட கீர்த்தனாவிடம் புகார் பெற்ற காவல்துறையினர், கடத்தலில் ஈடுபட்ட பெருமாள் மற்றும் அவரது நண்பர்களைத் தேடி வருகின்றனர். மனைவியைப் பட்டப்பகலில் ஒரு கும்பல் கடத்திச் சென்ற சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு கடத்தல் வரை சென்றது குறித்துப் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
