பள்ளியில் பயங்கரம்... மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் !
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சிறுகன்பூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று முறைப்படி இயங்கி வருகிறது. இக்கிராமத்துப் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாகச் சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த 55 வயது காட்டுராஜா என்பவர் ஆசிரியராகத் திறம்படப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக இதே பள்ளியில் தற்காலிகத் தலைமை ஆசிரியராகவும் கூடுதல் பொறுப்பேற்றுப் பணிகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறார்.

இவர் தனது உயர் பொறுப்பைத் தவறாகப் பயன்படுத்திப் பள்ளியில் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிகளிடம் தவறான அர்த்தத்தில் பேசி வந்துள்ளார். மேலும் பள்ளி அறைகளில் மாணவிகளின் உடலைத் தொட்டுப் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கடுமையான புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களின் பெற்றோரிடம் கண்ணீருடன் கூற, அவர்கள் பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகளுக்கு அவசரமாகத் தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் ராஜூவ்காந்தி தலைமையிலான குழுவினர் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையில் காட்டுராஜாவின் பாலியல் அத்துமீறல்கள் அப்பட்டமாகத் தெரியவந்தது. இதையடுத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து காமுகத் தலைமை ஆசிரியர் காட்டுராஜாவை நேற்று அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைத்தனர்.
