பெரியார் அறிவுலகம் திறப்பு விழா... நாளை கோவை செல்கிறார் முதல்வர் விஜய் - முழு பயண விவரம்!

 
பெரியார் அறிவுலகம் கோவை

தமிழக முதலமைச்சர் விஜய் நாளை காலை விமானம் மூலம் கோவைக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி செலவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள 'பெரியார் அறிவுலகம்' கட்டிடத்தைத் திறந்து வைப்பதற்காக அவர் வருகை தரவுள்ள நிலையில், அவரது பயணத்திற்கான முழு விவரங்கள் வெளியாகியுள்ளன.

நாளை காலை 11:00 மணி: முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் கோவை விமான நிலையத்தை வந்தடைகிறார். காலை 11:45 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக அவிநாசி சாலை வழியாகப் பயணம் செய்து காந்திபுரத்தில் அமைந்துள்ள 'பெரியார் அறிவுலகம்' வளாகத்தை வந்தடைகிறார். வழியில் பொதுமக்களைச் சந்திக்கும் வகையில் ரோடு ஷோ நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் அறிவுலகம் கோவை

காலை 11:45 மணி - மதியம் 1:05 மணி: அறிவுலக வளாகத்தில் கல்வெட்டைத் திறந்து வைத்து புதிய கட்டிடத்தைப் பார்வையிடுகிறார். மேலும், அங்கு முடிவுற்ற பணிகளைத் திறந்து வைப்பதுடன், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட அரசு விழாவில் கலந்துகொள்கிறார்.

விண்வெளியில் செல்வது போன்ற நல்அனுபவத்தைத் தரும் 'ஸ்பேஸ் லிப்ட்' வசதியில் முதல்வர் பயணிப்பாரா என்பது குறித்த முடிவு நாளைய நிலவரப்படி தீர்மானிக்கப்பட உள்ளது. மேலும், அறிவுலகத்தின் 2-வது தளத்தில் மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவியருடன் அவர் கலந்துரையாடல் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மதியம் 1:06 மணிக்கு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு காந்திபுரத்தில் இருந்து கார் மூலம் புறப்படுகிறார். மதியம் 1:40 மணிக்கு மீண்டும் கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னைக்குத் திரும்புகிறார். முதலமைச்சரின் இந்தக் கோயம்புத்தூர் வருகையை முன்னிட்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.