திணறுது பெருங்களத்தூர்... ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை.. ஒரே நேரத்தில் சென்னை திரும்பும் மக்கள்!
தேர்தல் வாக்குப்பதிவுக்கான விடுமுறை, வார விடுமுறை, கோடை விடுமுறைக்கு குழந்தைகளை உறவினர்கள் வீட்டில் விடுவது, சுற்றுலா என்று கடந்த ஐந்து நாட்களாக திட்டமிட்ட வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு இன்று பணியிடங்களுக்கு ஒரே நேரத்தில் மக்கள் புறப்பட்டு வருவதால், விடிய விடிய ஜி.எஸ்.டி சாலை கடும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகியது. நேற்று மாலை முதலே திருச்சி தேசிய நெடுஞ்சாலை திணறத் தொடங்கியது.

சிங்கபெருமாள் கோவில் வழியாக வருபவை: இந்த வாகனங்கள் ஓரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாகத் திருப்பி விடப்படும். இவையும் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூலமாகச் சென்னைக்குள் நுழையலாம்.
கடலோர மாவட்டங்களான புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.எஸ்.டி சாலையைத் தவிர்த்து, கிழக்குக் கடற்கரைச் சாலை அல்லது ராஜீவ் காந்தி சாலை ஆகியவற்றைப் பயன்படுத்தி சென்னைக்குள் வரலாம் என்று போக்குவரத்து போலீசார் திட்டமிட்டிருந்தனர்.

ஆனாலும் லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் பேருந்துகள் மற்றும் சொந்த வாகனங்களில் இன்று அதிகாலை முதலே ஒரே நேரத்தில் மொத்தமாக சென்னை திரும்பியதால் பெருங்களத்தூர் மற்றும் தாம்பரம் பகுதிகளில் பயங்கர நெரிசல் ஏற்படத் துவங்கியது. குறிப்பாக திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
