அக்.2 முதல் இறைச்சி விளம்பரங்களுக்குத் தடை விதிக்க மத்திய அரசுக்குப் பீட்டா அமைப்பு வலியுறுத்தல்!

 
பீட்டா

மகாத்மா காந்தியின் அகிம்சை மீதான அர்ப்பணிப்பைக் கவுரவிக்கும் வகையில், எதிர்வரும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் இறைச்சி விளம்பரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் 'பீட்டா இந்தியா' அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

விலங்கு நலன், பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த கவலைகளைச் சுட்டிக்காட்டி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கு பீட்டா இந்தியா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

சிக்கன் கோழி இறைச்சி

ஆம்ஸ்டர்டாம் மற்றும் ஹார்லெம் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நகரங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள இறைச்சி விளம்பரக் கட்டுப்பாடுகளையும், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சைவ உணவுகளைப் பரிமாறியதையும் பீட்டா தனது கடிதத்தில் மேற்கோள் காட்டியுள்ளது.

கோழிகள், மாடுகள், எருமைகள் மற்றும் ஆடுகள் உள்ளிட்ட விலங்குகள் கொண்டு செல்லப்படும் மற்றும் வெட்டப்படும் முறைகளைக் கடுமையாகச் சாடியுள்ள பீட்டா அமைப்பு, இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

இறைச்சி

இந்தியா உலகின் மிகப்பெரிய சைவ உணவு உண்போர் மக்கள்தொகையைக் கொண்ட நாடு என்பதையும், அகிம்சையில் வேரூன்றிய பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள பீட்டா, அக்டோபர் 2 முதல் அனைத்து ஊடகங்களிலும் இறைச்சி விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.