பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு... நடுரோட்டில் பைக்கை தீயிட்டுக் கொளுத்தி சிபிஐ தொழிலாளர்கள் போராட்டம்!

 
கேரளா போராட்டம் பைக் தீயிட்டு எரிப்பு கேரளா போராட்டம் பைக் தீயிட்டு எரிப்பு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ள நிலையிலும், மத்திய அரசு தொடர்ந்து எரிபொருட்களின் விலையை உயர்த்திப் பொதுமக்களைக் கஷ்டப்படுத்துவதாகக் குற்றம்சாட்டி கேரளா முழுவதும் இடதுசாரி தொழிற்சங்கங்கள் தங்களது போராட்டங்களை உக்கிரப்படுத்தியுள்ளன.

இதன் உச்சக்கட்டமாக, கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தின் போது, ஆவேசமடைந்த தொழிலாளி ஒருவர் தனது இருசக்கர வாகனத்தையே நடுரோட்டில் தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் தற்பொழுது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) அதிகாரப்பூர்வத் தொழிலாளர் அமைப்பான ஏஐடியுசி (AITUC) சார்பாக, திருச்சூர் மாவட்டத் தனியார் மோட்டார் தொழிலாளர்கள் சங்கம் ஒருங்கிணைத்த இந்த மெகா கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாகத் திரண்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், மத்திய பாஜக அரசின் எரிபொருள் விலைக் கொள்கைக்கு எதிராகக் கடுமையான கோஷங்களை எழுப்பியவாறு பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தை நோக்கிப் பிரம்மாண்டப் பேரணியாக முன்னேறினர்.

பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் பேருந்து தொழிலாளர்களின் தினசரி வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிவிட்டதாகப் போராட்டக் குழுவினர் குற்றம் சாட்டினர். பேரணி பிஎஸ்என்எல் அலுவலகத்தை நெருங்கிய போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரின் தடுப்புகளை மீறிப் போராட்டம் திடீரென ஆவேசமாக மாறியது.

மத்திய அரசின் பிடிவாதப் போக்கிற்குத் தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக, ஏஐடியுசி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர், தான் கொண்டு வந்திருந்த மோட்டார் சைக்கிளை  திடீரெனச் சாலையின் நடுவே நிறுத்தி, அதற்குத் தீயிட்டுக் கொளுத்தினார்.

நெடுஞ்சாலையில் பைக் கொழுந்துவிட்டு எரிந்ததால், அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. எதிர்பாராத இந்த அதிரடிச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த திருச்சூர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், உடனடியாக விரைந்து வந்து பைக் மீது தண்ணீரைப் பாய்ச்சி அடித்துத் தீயை அணைத்தனர். விலை உயர்வுக்கு எதிராகத் தங்களின் சொந்த வாகனத்தையே எரித்துப் போராடிய இடதுசாரி தொழிற்சங்கங்களின் இந்த அதிரடிப் போராட்ட வடிவம், கேரள அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.