நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்வு... லிட்டருக்கு ₹25 வரை அதிகரிப்பு!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயரத் தொடங்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28 முதல் நீடித்து வரும் போர் காரணமாக ஈரானின் எண்ணெய் வயல்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் கடும் ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. ஏற்கெனவே நயாரா நிறுவனத்தைத் தொடர்ந்து, தற்போது ஷெல் நிறுவனமும் தனது விற்பனை விலையை உயர்த்தியுள்ளது.

ஷெல் நிறுவனம் நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ள புதிய விலை மாற்றங்கள்லின் படி, பெட்ரோல் லிட்டருக்கு ₹7.41 உயர்ந்து, தற்போது ₹119.85-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் லிட்டருக்கு ₹25.01 உயர்ந்து, ₹123.52-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தனியார் நிறுவனங்கள் விலையை உயர்த்தினாலும், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் விலையை உயர்த்தவில்லை.

சாமானிய மக்களைப் பாதிப்பில் இருந்து காக்க, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சுங்க வரியை லிட்டருக்கு ₹10 குறைத்து மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இதனால் பொதுத்துறை பெட்ரோல் பங்குகளில் விலை கட்டுக்குள்ளேயே நீடிக்கிறது.
டீசல் விலை லிட்டருக்கு ₹25 வரை உயர்த்தப்பட்டுள்ளதால், ஷெல் பங்குகளை நம்பியிருக்கும் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை நோக்கித் திரும்பத் தொடங்கியுள்ளன. இதனால் அரசுப் பங்குகளில் வாகனங்களின் வரிசை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
