சிலிண்டர் விலை உயர்வைத் தொடர்ந்து எகிறப் போகும் பெட்ரோல், டீசல் விலை - வாகன ஓட்டிகள் கலக்கம்!
இந்தியாவில் வணிக ரீதியிலான கேஸ் சிலிண்டர்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சாமானிய மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, ஒரு பேரல் 126 டாலர் என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது. மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடைகள் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யப்படவில்லை. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் நஷ்டத்தைச் சரிசெய்ய, லிட்டருக்கு 4 முதல் 5 ரூபாய் வரை விலையை உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்கம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு இந்த விலை உயர்வு அமலுக்கு வரலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

நேற்று (மே 1) முதல் 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டர் விலை சுமார் 993 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் விலையில் நேற்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இருப்பினும், வரும் நாட்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கேரளா போன்ற மாநிலங்களில் வணிக சிலிண்டர் விலை உயர்வை எதிர்த்து ஹோட்டல் உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், எரிபொருள் விலையும் உயர்ந்தால் அது அத்தியாவசியப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்தக்கூடும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
