கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு விச்சு; காரைக்குடியில் பரபரப்பு!

 
கார்த்தி சிதம்பரம் கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரின் கூட்டு அலுவலகத்தின் மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி சுப்பிரமணியபுரம் முதல் வீதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோரின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல அலுவலகத்தைத் திறக்க வந்த கட்சியினர், அங்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுத் தீப்பிடித்துக் கரிந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

கார்த்தி சிதம்பரம்

இது குறித்து தகவலறிந்து காரைக்குடி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ மாங்குடி மற்றும் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் நேரில் வந்து முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டார்.

எம்.பி. அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாதது போலீசாருக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அந்த வீதியில் உள்ள மற்ற வணிகக் கட்டடங்கள் மற்றும் வீடுகளில் உள்ள கேமரா காட்சிகளைச் சேகரித்து, பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முக்கிய அரசியல் தலைவர்களின் அலுவலகம் தாக்கப்பட்டது காரைக்குடி பகுதியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இதையொட்டி அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.