எண்ணெய் நெருக்கடியை வென்ற இந்தியா... பெட்ரோல் தட்டுப்பாடு வராத ரகசியம்!
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்ட மோதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பயங்கர பதற்றம் உருவானது. இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்ததோடு, பல உலக நாடுகள் தங்களின் பெட்ரோல் விநியோகத்தை ரேஷன் முறைக்கு மாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டன. ஆனால், தங்களுக்குத் தேவையான எண்ணெயில் 90 சதவீதத்தை இறக்குமதி செய்யும் இந்தியா, முன்கூட்டியே திட்டமிட்ட சில பாதுகாப்பு வழிமுறைகளால் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மிக சாதுரியமாகத் தப்பியுள்ளது.
இதற்கு முக்கியக் காரணம் இந்தியா கடந்த காலங்களை போல ஒரே ஒரு பிராந்தியத்தை மட்டும் நம்பியிருக்காமல், கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளின் எண்ணிக்கையை 40 ஆக உயர்த்தியதுதான். வழக்கமான வளைகுடா நாடுகளைத் தவிர்த்து ரஷ்யா, வெனிசுலா போன்ற நாடுகளிடமிருந்து தள்ளுபடி விலையில் எண்ணெயைப் பெற்ற இந்தியா, ஆபத்தான கடல் வழித்தடங்களைத் தவிர்த்து ஓமான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக மாற்றுத் துறைமுகங்களைப் பயன்படுத்தியது. மேலும் நம் நாட்டில் 74 நாட்களுக்குத் தேவையான அவசர கால எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு இருப்பு வைக்கப்பட்டிருந்ததும், உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி 40 சதவீதம் அதிகரிக்கப்பட்டதும் பெரும் கைகொடுத்தது.

இந்தியாவின் இந்த சிறப்பான மேலாண்மையால் உள்நாட்டில் எரிபொருள் விலை உயராமல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், உலகின் பிற 18 நாடுகள் வாகனங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தன. இலங்கை, இந்தோனேசியா போன்ற 13 நாடுகள் தங்களின் அரசு ஊழியர்களைக் கட்டாயமாக வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவிட்ட போதும், இந்தியாவில் அதுபோன்ற அவசர நிலை ஏற்படவில்லை. போர் நடந்த பகுதிகளில் இருந்த 4.75 லட்சம் இந்தியர்களை அரசு பத்திரமாக மீட்டதோடு, சிறு தொழில்கள் மற்றும் விவசாயிகளுக்குத் தேவையான உரம் மற்றும் கடனுதவிகளையும் வழங்கி நாட்டின் பொருளாதாரத்தையும் மத்திய அரசு திறம்படப் பாதுகாத்துள்ளது.
