பி.எப். பணத்தை இனி யு.பி.ஐ. மூலம் எடுக்கலாம்... டிசம்பர் 1 முதல் சூப்பர் வசதி!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் புதிய வசதி அடுத்த மாதம் அதாவது டிசம்பர் இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தற்போது இணையதளத்தில் பல்வேறு விவரங்களை உள்ளீடு செய்து பணம் எடுப்பதில் சந்தாதாரர்கள் சந்தித்து வரும் சிரமங்களைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான தொழில்நுட்பப் பணிகள், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் சோதனைகள் நிறைவடைந்து, குறிப்பிட்ட பயனாளர்களைக் கொண்டு இரண்டு கட்ட சோதனைகளும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. சோதனையின்போது 102 சந்தாதாரர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு சுமார் ரூ.5 லட்சம் வங்கிக் கணக்குகளில் உடனடியாக வரவு வைக்கப்பட்டது. சிறிய தொகைகளுக்கு அடிக்கடி பணம் எடுப்பதைத் தவிர்க்க குறைந்தபட்சம் ரூ.1,000 வரம்பு நிர்ணயிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பீம் செயலி மூலம் நடைபெறும் இந்தப் பரிவர்த்தனைக்காக தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவற்றுடன் இணைந்து பணிகள் நடந்து வருகின்றன. ஒப்புதல் மற்றும் பணம் வரவு வைப்பதில் உள்ள காலதாமதம் இதனால் குறையும் என்றாலும், தற்போதைய விதிமுறைகளும் வரம்புகளும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
