இன்று நாடு முழுவதும் மருந்தகங்கள் மூடல்... ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிராக வேலைநிறுத்தப் போராட்டம்!
ஆன்லைன் மூலமாக மருந்துகள் விற்பனை செய்யப்படுவதைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் அனைத்து மருந்துக் கடைகளையும் முழுமையாக அடைத்துப் போராட்டம் நடத்த மருந்தக உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. இந்தத் திடீர் நாடு தழுவிய மருந்துக் கடைகள் அடைப்புப் போராட்டம் காரணமாக இன்று பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை வாங்குவதில் மிகப்பெரிய அளவில் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என அஞ்சப்படுகிறது.

பொதுமக்களின் மருத்துவம் சார்ந்த பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த விழிப்புணர்வுப் போராட்டமானது அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆன்லைன் மூலம் மருத்துவர்களின் முறையான பரிந்துரைச் சீட்டு இன்றி வலி நிவாரணிகள் மற்றும் தூக்க மாத்திரைகளை மிக எளிதாக வாங்கி இளம் தலைமுறையினர் போதைக்கு அடிமையாவதை அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், சந்தையில் உயிர் காக்கும் மருந்துகளின் லாப சதவீதங்கள் மற்றும் தள்ளுபடிகளை முறைப்படுத்த வேண்டும் என்றும், தங்குதடையின்றி அரங்கேறி வரும் போலி மருந்து விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

இவற்றுடன் சட்டவிரோத ஆன்லைன் விற்பனை மூலம் எளிதில் கிடைக்கும் கருக்கலைப்பு மருந்துகளால் நாட்டில் ஏற்படும் இளம் பெண்களின் உயிரிழப்புகள் மற்றும் கலாசார சீரழிவுகளைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்பதும் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், எதிர்காலச் சந்ததியினரின் உடல் நலனைப் பேணவும் இன்று நடத்தப்படும் இந்த ஒட்டுமொத்த மருந்தகங்களின் மூடல் போராட்டத்திற்குப் பொதுமக்கள் அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் எனச் சங்க நிர்வாகிகள் கூட்டாகக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
