பல்கலைக்கழக வளாக குளத்தில் பிஎச்.டி மாணவர் சடலமாகக் மீட்பு - காவல் துறை விசாரணை!
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகக் குளத்தில், கர்நாடகாவைச் சேர்ந்த பிஎச்.டி மாணவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர், வெள்ளானிக்கராவில் அமைந்துள்ள பிரபல கேரள வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது: சடலமாக மீட்கப்பட்டவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதான கிஷோர் குமார் கௌடா என்பது தெரியவந்துள்ளது.
இவர் அப்பல்கலைக்கழகத்தில் காய்கறி அறிவியல் துறையில் முதலாம் ஆண்டு முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவராகப் பயின்று வந்தார். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் தங்கித் தனது ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். குளத்தில் மாணவர் சடலமாக மிதப்பதைக் கண்டவர்கள் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், குளத்தில் இருந்து மாணவரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
