தவெக அமைச்சர்களின் போன்கள் ஹேக்கிங்... அமெரிக்க சர்வர் மூலம் ஊடுருவலா?!

 
சட்டசபை விஜய்

தமிழக அரசியல் வட்டாரத்தில்  ஆளும் கட்சியாக விளங்கும் தவெக அமைச்சர்கள் பலரது செல்போன்கள் மர்மமான முறையில் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் மிக முக்கிய முடிவுகளை எடுக்கும் தவெக அமைச்சர்களின் தனிப்பட்ட அலைபேசி உரையாடல்கள் மற்றும் தகவல்கள் ரகசியமாக ஒட்டுக் கேட்கப்படுவதாக தகவல்கள் பரவி வருகின்றன. தவெக மூத்த அமைச்சர் ஒருவரின் செல்போனில் கடந்த சில நாட்களாகப் பயன்படுத்தாத நேரத்திலும் மிக வேகமாகப் பேட்டரி சார்ஜ் குறைந்து கொண்டே இருந்துள்ளது. இதில் சந்தேகமடைந்த அமைச்சர், தனது மொபைல் போனை பிரத்யேக சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் மூலம் ஆய்வு செய்ய உத்தவிட்டார்.

அந்த அலைபேசியை விரிவாகப் பரிசோதித்த சைபர் வல்லுநர்கள், அமைச்சரின் போனில் ஒரு மர்ம உளவு மென்பொருள்  நிறுவப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர். மேலும், அந்த மென்பொருள் மூலம் போனில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் அமெரிக்காவில் உள்ள ஒரு  சர்வர் மூலமாகக் கண்காணிக்கப்பட்டு, ஹேக் செய்யப்பட்டுள்ளதும் முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து தவெக கட்சித் தலைமை மிகவும் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அமைச்சரைத் தவிர மற்ற தவெக அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகளின் அலைபேசிகளும் இதேபோல உளவு பார்க்கப்படுகிறதா என்பது குறித்து சைபர் கிரைம் நிபுணர்களைக் கொண்டு தவெக தலைமை ரகசிய விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

அமைச்சர்களின் போன்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக எழுந்துள்ள இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள போதிலும், இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பிலிருந்தோ அல்லது காவல்துறை தரப்பிலிருந்தோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்போ அல்லது விளக்கமோ முறைப்படி வெளியிடப்படவில்லை.