அரசு பள்ளிகளில் வாரத்தில் 5 நாட்கள் உடற்கல்வி வகுப்பு கட்டாயம் - அமைச்சர் ராஜ்மோகன் புதிய அட்டவணையை வெளியிட்டு அறிவிப்பு!

 
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் வகையிலும், கல்விப் பாடங்களோடு விளையாட்டுகளுக்கும் சம முக்கியத்துவம் அளிக்கும் நோக்கிலும், திருத்தியமைக்கப்பட்ட புதிய பள்ளிக் கால அட்டவணையை மாநிலப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்னையில் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இப்புதிய கால அட்டவணையின்படி, பள்ளிகளில் இனி வாரத்திற்கு 5 நாட்கள் உடற்கல்வி வகுப்புகள் நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இன்றைய நவீன கல்விச் சூழலில் மாணவர்கள் அதிக அளவிலான கல்விச் சுமை மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருவதைத் தவிர்க்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாகவே மாணவர்களின் உடல் தகுதியைப் பேணவும், அவர்களின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு விளையாட்டுகளும் உடற்பயிற்சிகளும் மிக அவசியமானவை என்பதை உணர்ந்து இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஏற்கனவே பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு வகுப்புகளுக்குப் பெயரளவிலேயே நேரம் ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், இனி அத்தகைய நிலை மாறி மாணவர்கள் தினமும் விளையாடுவதற்கும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடனான கூட்டத்தில் இந்தக் புதிய கால அட்டவணையை வெளியிட்டுப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், மாணவர்களின் கல்வி கற்றல் திறனுடன் அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியமும் சம அளவில் முக்கியமானது.

இதனை உறுதி செய்யும் வகையில், இனி தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் வாரத்தின் ஐந்து நாட்களும் உடற்கல்வி வகுப்புகள் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். இதற்கென பிரத்யேகமான கால அட்டவணை தயாரிக்கப்பட்டு அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

பாட வேளைகளில் ஏற்பட்ட தேவையற்ற அழுத்தங்களைக் குறைத்து, மாணவர்கள் உற்சாகமாகப் பள்ளிக் கல்வியைத் தொடர இந்த விளையாட்டு வகுப்புகள் பெரிதும் உதவும்.

மாணவர்களிடையே உடற்தகுதியை வளர்ப்பதுடன் விளையாட்டுத் துறையில் இளம் வயதிலேயே ஆர்வம் ஊட்டும் வகையில் பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ள இந்தச் சீரிய நடவடிக்கைக்கு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.