தமிழகப் பள்ளிகளில் இனி 6 முதல் - 12-ம் வகுப்பு வரை உடற்கல்வி கட்டாயம் - ஆசிரியர்களுக்குப் புதிய பாடப்புத்தகங்கள்!

 
பள்ளிக்கல்வித்துறை

மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழகப் பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகளைக் கட்டாயமாக்கிப் பள்ளிக்கல்வித்துறை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதற்கென உடற்கல்வி ஆசிரியர்களுக்குப் புதிய வழிகாட்டிப் புத்தகங்களை வழங்கவும் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கடந்த கல்வியாண்டுகளில் பல பள்ளிகளில், குறிப்பாகச் சில தனியார் பள்ளிகளில், உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்ட பாட வேளைகளை  கணிதம், அறிவியல் போன்ற இதர முக்கியப் பாட வகுப்புகளுக்காகப் பயன்படுத்தியதாகப் பரவலான புகார்கள் எழுந்தன. இதையடுத்து, நடப்பு 2026-27 கல்வியாண்டு முதல் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் 6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் எனப் பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான கற்பித்தல் நடைமுறையை உறுதி செய்வதற்காக, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வகுப்பு வாரியாகப் புதிய ஆசிரியர் வளநூல்கள் மற்றும் பாட வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

இந்த புத்தகங்களில் மாணவர்களின் வயதுக்கேற்ற பிரத்யேக உடற்பயிற்சி முறைகள், விளையாட்டுத் திறன் மேம்பாடு மற்றும் உடற்தகுதி மதிப்பீடு, விளையாட்டுப் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் முதலுதவி விபரங்கள் இடம்பெறும்.

பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ள முக்கிய வழிகாட்டுதல்களின்படி, பள்ளி நிர்வாகங்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய விதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பள்ளி நேர அட்டவணையில் உடற்கல்விக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தை வேறு எந்தப் பாட வகுப்புகளுக்கும் எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது. விளையாட்டில் அதிக ஆர்வமும் திறமையும் கொண்ட மாணவர்களுக்குப் பள்ளி நேரத்திற்குப் பிறகும் சிறப்புப் பயிற்சிகளை வழங்க வேண்டும்.

பள்ளிகளில் பயன்படுத்தப்படாமல் சும்மா கிடக்கும் விளையாட்டு மைதானங்கள் குறித்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் நேரில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைக்கும் பள்ளிகளைத் தனியாக அடையாளம் கண்டு அரசு சார்பில் ஊக்குவிக்க வேண்டும்.

உடற்கல்வியைத் துணைப் பாடமாக ஒதுக்காமல் அத்தியாவசியக் கற்றலாக மாற்றுவதன் மூலம், மாணவர்களுக்குப் பல நன்மைகள் கிடைக்கப் பெறுகின்றன. தினசரி உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு ஒழுக்கம் மேம்படும். குழுவாக இணைந்து செயல்படுதல், தலைமைத்துவப் பண்புகள் மற்றும் மன அழுத்த மேலாண்மைத் திறன்கள் வளரும். திறமையான இளம் விளையாட்டு வீரர்களைப் பள்ளி அளவிலேயே தொடக்கக் காலத்திலேயே கண்டறிந்து, அவர்களை மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்குத் தயார்படுத்த இந்த முயற்சி ஒரு அடித்தளமாக அமையும்.