சிகிச்சையின் போது இளம்பெண் மீது பாலியல் வன்கொடுமை முயற்சி - பிசியோதெரபிஸ்ட் கைது!
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பய்யன்னூரில் உள்ள வெல்னஸ் மையத்தில், பிசியோதெரபி சிகிச்சை பெற வந்த இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற பிசியோதெரபிஸ்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவின் பய்யன்னூரில் இயங்கி வரும் 'ஆரோக்யா வெல்னஸ்' மையத்தில் சரத் நம்பியார் என்பவர் பிசியோதெரபிஸ்டாகப் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சிகிச்சைப் பெற வந்த இளம்பெண் ஒருவரிடம் அவர் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த அந்தப் பெண், பிற்காலத்தில் நடைபெற்ற ஒரு ஆலோசனை அமர்வின் போது தமக்கு ஏற்பட்ட துயரத்தைப் வெளிப்படுத்தியுள்ளார். பின்னர் இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், பிசியோதெரபிஸ்ட் சரத் நம்பியார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீசாரின் விசாரணையில், மற்றொரு இளம்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட புகாரில் சரத் நம்பியார் ஏற்கனவே கைது செய்யப்பட்டுப் பின்னணி உடையவர் என்பது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
