தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து முதல்வர் இல்லத்தைக் காலி செய்தார் பினராயி விஜயன்.!
கேரள சட்டமன்றத் தேர்தலில் ஆளும் இடதுசாரி முன்னணி (LDF) தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பினராயி விஜயன், தனது அதிகாரப்பூர்வ இல்லமான 'கிளிஃப் ஹவுஸை' காலி செய்துள்ளார். மாநிலத்தின் அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் வாடகைக் கட்டிடத்திற்கு அவர் இன்று (மே 11) தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டார். முதலமைச்சர் இல்லத்தில் இருந்த அவரது உடைமைகள் அனைத்தும் வாகனங்கள் மூலம் புதிய வாடகை வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன.
டெல்லியில் நடைபெற்ற சிபிஎம் அரசியல் தலைமைக்குழு (Polit Bureau) கூட்டத்தில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய பினராயி விஜயனை, அவரது மருமகனும் முன்னாள் அமைச்சருமான முகமது ரியாஸ் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் புதிய இல்லத்தில் வரவேற்றனர். கட்சி சார்பில் அவருக்கு அடுக்குமாடி குடியிருப்பு வழங்க முன்வந்த போதிலும், அவர் தனது குடும்பத்துடன் இந்த இரண்டு அடுக்கு வாடகைக் கட்டிடத்தில் தங்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு இடதுசாரி அரசு ஆட்சியை இழந்திருப்பது கேரள அரசியலில் ஒரு சகாப்தத்தின் முடிவாகப் பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், கேரள சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகப் பினராயி விஜயன் தேர்வு செய்யப்படுவாரா என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒருவேளை அவர் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அரசு விதிகளின்படி அவருக்கு 'கான்டன்மென்ட் ஹவுஸ்' என்கிற அதிகாரப்பூர்வ இல்லம் ஒதுக்கப்படும். அதுவரை அவர் இந்த வாடகை வீட்டிலேயே தங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 140 இடங்களைக் கொண்ட கேரளப் பேரவையில், இடதுசாரி முன்னணி வெறும் 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியைப் பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.
