"பியூஷ் கோயல் நாவை அடக்கிப் பேசணும்" - ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!

 
பியூஷ் கோயல் பியூஷ் கோயல்

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேலூரில் நடைபெற்ற பிரம்மாண்டப் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்க முயலும் ஒன்றிய அரசின் செயலை அவர் "வரலாற்றுச் சதி" என விமர்சித்துள்ளார்.

பியூஷ் கோயல்

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த வறுமையைக் கட்டுப்படுத்தக் கொண்டுவரப்பட்ட குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தென் மாநிலங்கள் சிறப்பாகப் பின்பற்றின. ஆனால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்காகத் தற்போது தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களைத் தண்டிக்க ஒன்றிய அரசு முயல்வதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இது தமிழ்நாட்டின் குரல்வளையை நெரிக்கும் செயல் என்றும், இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் கொந்தளித்தார்.

மத்திய அரசுக்கு எதிராகப் பேசுபவர்கள் படிப்பறிவற்றவர்கள் என விமர்சித்த ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலைச் சாடிய முதல்வர், "பியூஷ் கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும். அத்துமீறி வாய்க்கொழுப்போடு திமிர்த்தனமாகப் பேசி வருகிறார். மரியாதை கொடுத்தால்தான் மரியாதை கிடைக்கும்" எனத் தெரிவித்தார். மேலும், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் மொத்த உருவமாகத் தான் களத்தில் நின்று போராடப் போவதாகவும் அவர் சூளுரைத்தார்.

பியூஸ் கோயல் எடப்பாடி

சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாளில் அவர் மீது ஆணையாகச் சொல்கிறேன் என்று குறிப்பிட்ட முதல்வர், தமிழ்நாட்டிற்குத் தவறிழைக்க நினைத்தால் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்குத் தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் என எச்சரித்தார். இது பிரதமர் மோடிக்கு விடுக்கப்படும் "இறுதி எச்சரிக்கை" என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.