டயரில் தீப்பிடித்து தரைதட்டிய விமானம்... பரபரப்பு வீடியோ!
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து 277 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களுடன் நேபாளம் நோக்கிப் புறப்பட்ட துருக்கி ஏர்லைன்ஸ் விமானம், இன்று காலை திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது பெரும் விபத்தைச் சந்தித்தது. விமானம் ஓடுபாதையில் தரையிறங்க முற்பட்ட அந்த விநாடியில், அதன் டயரில் எதிர்பாராதவிதமாகத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் தீ படிப்படியாக விமானத்தின் அடிப்பகுதி வரை பரவி, கரும்புகை வெளியேறியதால் பயணிகள் கடும் அதிர்ச்சியும் பீதியும் அடைந்தனர்.
விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் கிடைத்தவுடன், தீயணைப்பு வீரர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விமானத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதனால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டு, விமானத்தில் இருந்த மொத்தம் 288 பேரும் எவ்வித காயமுமின்றிப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்து காரணமாகத் திரிபுவன் விமான நிலையத்தின் போக்குவரத்துப் பணிகள் மற்றும் பிற சேவைகள் சில மணி நேரங்களுக்கு முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
தரையிறங்கும் போது ஏற்பட்ட உராய்வு காரணமாகவே டயரில் தீப்பற்றி இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும், தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் உள்ளதா அல்லது வேறு காரணங்கள் உண்டா என்பது குறித்து விமான நிலைய உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கட்டான சூழலில் தீயணைப்புப் படையினர் விரைந்து செயல்பட்டதால், மிகப்பெரிய விமான விபத்து அதிர்ஷ்டவசமாகத் தடுக்கப்பட்டுள்ளது.
