8,800 அடி உயரத்தில் வளைகுடா கடலில் விழுந்த விமானம்.. 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு!

 
விமானம் கடலில் விழுந்து

அமெரிக்காவின் மிசிசிபி கடற்கரைக்கு அப்பால் உள்ள மெக்சிகோ வளைகுடாவில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய கோர விபத்தில், இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பல மணி நேரத் தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு, விமானத்தின் சிதைவுகளிலிருந்து ஆறு பேரின் உடல்களையும் மீட்புக் குழுவினர் மீட்டனர்.

மெக்சிகோ வளைகுடாவில், மிசிசிபி கடற்கரைக்கு அப்பால் உள்ள ஹார்ன் தீவு பகுதிக்கு அருகே சிறிய ரக விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. சுமார் 8,800 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து நொறுங்கியதாகத் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த இரண்டு குழந்தைகள் உட்பட மொத்தம் 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததும் அமெரிக்கக் கடலோரக் காவல்படையினர்  மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 4 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிரத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

தேடுதல் பணியில் விமானத்தின் சிதைவுகளிலிருந்து 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. “விமான விபத்தில் உயிரிழந்த ஆறு பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன; பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என அமெரிக்கக் கடலோரக் காவல்படை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.