சென்னையில் மின்வெட்டு திட்டமிட்ட சதியா?... மின்வாரிய அலுவலகத்தில் புகுந்து 'பியூஸ் கேரியர்'களை திருடிய 2 பேர் கைது!

 
பியூஸ் கேரியர் திருடிய பியூஸ் கேரியர் திருடிய

சென்னை ஆவடியில் மின்வாரிய அலுவலகத்தின் பின்புறம் இருந்த முக்கிய மின்சார கேபிள் பெட்டியிலிருந்து 'பியூஸ் கேரியர்'களைத் திருடிச் சென்ற இரண்டு வாலிபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மாநகரின் பல பகுதிகளிலும் இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வரும் சூழலில், இந்தத் திருட்டுக்குப் பின்னால் ஏதேனும் திட்டமிட்ட சதி உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தான் இந்த துணிகரத் திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, நள்ளிரவு நேரத்தில் மின்வாரிய அலுவலகத்தின் பின்புறப் பகுதிக்குச் சென்ற மர்ம நபர்கள் சிலர், அங்கிருந்த பிரதான மின்சார கேபிள் பெட்டியை உடைத்துள்ளனர். பின்னர், அதற்குள் இருந்த 14 அத்தியாவசிய 'பியூஸ் கேரியர்'களை கழற்றித் திருடிக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.

மின்வாரிய அலுவலகத்திலேயே அரசுப் பொருட்களைத் திருடிச் சென்ற இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (19) மற்றும் வினித்குமார் (20) ஆகிய இரு இளைஞர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

சாதாரணக் கடைகளிலோ அல்லது வீடுகளிலோ திருடாமல், மின்வாரிய அலுவலகத்தை நோட்டமிட்டு இந்த இளைஞர்கள் ஏன் பியூஸ் கேரியர்களைத் திருடினார்கள் என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவிக்கும் அளவிற்குத் தொடர் மின்வெட்டு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன.