"விஜய் குறித்துப் பேசியதை அருள்கூர்ந்து மறந்துவிடுங்கள்" - சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ உருக்கம்!

 
திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்

முதலமைச்சர் விஜய் குறித்துத் தவறாகப் பேசியதற்காகத் தன் கட்சித் தலைவர்கள் தண்டித்ததாகக் குறிப்பிட்ட திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், பேரவையில் அந்த வார்த்தைகளை மறந்து விடுமாறு கேட்டுக் கொண்டார்.

மார்க்கண்டேயன்

பாளையங்கோட்டை சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள மார்க்கண்டேயன் பேசுகையில், "முதலமைச்சர் விஜய் பற்றி இவ்வளவு கடுமையான வார்த்தைகளில் பேசியிருக்கக் கூடாது என்று தலைவர் மு.க.ஸ்டாலின் என்னைக் கண்டித்தார்" என்றார். சிறையில் சந்தித்த உதயநிதி ஸ்டாலினும், கனிமொழியும் கூட முதலமைச்சரின் பேச்சிற்கு அறிவார்த்தமாகப் பதிலளித்திருக்க வேண்டுமே தவிர, இவ்வளவு தடிமனான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது என்றே அறிவுறுத்தினர். என்னை அறியாமல் வெளிப்பட்ட அந்த வார்த்தைகளைத் தயவுசெய்து அனைவரும் அருள்கூர்ந்து மறந்துவிட வேண்டும் எனத் தெரிவித்தார்.

மார்க்கண்டேயன்

அவையில் 'கொலை வாளினை எடடா' என்று பாரதிதாசன் வரிகளைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், "அந்த வார்த்தையைச் சொன்னதற்காகப் தயவுசெய்து என்னை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்துவிட வேண்டாம்" எனக் நகைச்சுவையாகவும் கோரிக்கை விடுத்தார். தற்போதைய தவெக அரசின் நிதிநிலை அறிக்கை புதிய திட்டங்கள் எதுவும் இல்லாத ஒரு 'கானல் நீர் பட்ஜெட்'.

திமுக அரசின் முன்னோடித் திட்டங்களையே ஏற்றுக்கொண்டு, பெயர்களை மட்டுமே மாற்றி வருகிறது த.வெ.க அரசு. 'மாடித்தோட்டம்' என்பது 'பூந்தோட்டம்' என்றும், 'அவகாடோ' என்பது 'பட்டர் ஃப்ரூட்' என்றும் பெயர் மாறியுள்ளதே தவிர வேறு எந்தப் புதிய மாற்றமும் இல்லை எனச் சாடினார்.