“என்னைக் காப்பாத்துங்க...” - துபாயில் சிக்கிய பிரபல நடிகை, பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள்!
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் சிக்கியுள்ள பிரபல நடிகை சோனல் சவுஹான், தன்னை மீட்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்த பதில் தாக்குதல்களால் மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளிப் பரப்பு தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழில் 'இஞ்சி இடுப்பழகி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சோனல் சவுஹான், தற்போது துபாயில் தங்கியுள்ளார். அங்கிருந்து தாயகம் திரும்பத் திட்டமிட்டிருந்த நிலையில், போர்ச் சூழலால் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. துபாயில் தற்போது நிலவும் அசாதாரணமான சூழல் மற்றும் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அவர் தனது பதிவில் வெளிப்படுத்தியுள்ளார்.
"விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருகிறேன். துபாயில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சகத்தைக் குறிப்பிட்டு அவர் பதிவிட்டுள்ளார். ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளின் வான்வழிப் பாதையைப் பயன்படுத்தப் பாதுகாப்புச் சிக்கல்கள் இருப்பதால், ஏர் இந்தியா உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய இடங்களுக்கான விமானச் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

சோனல் சவுஹான் மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான இந்தியப் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வளைகுடா நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் தவித்து வருகின்றனர். போர் தீவிரமடைந்து வருவதால், அத்தியாவசியத் தேவையின்றி மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என இந்திய வெளியுறவுத் துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சோனல் சவுஹானின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், திரைத்துறையினரும் ரசிகர்களும் அவர் பாதுகாப்பாகத் திரும்பப் பிரார்த்தனை செய்து வருகின்றனர். மத்திய அரசு விரைவில் சிறப்பு விமானங்களை (Rescue Flights) இயக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
