பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ல் வெளியாக வாய்ப்பு - விடைத்தாள் மதிப்பீடு குறித்த முழு விவரம்!
தமிழகத்தில் 8.27 லட்சம் மாணவர்கள் எழுதி வரும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிகரித்துள்ள நிலையில், மே மாதம் 8-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முடிவுகளை வெளியிட அரசு தேர்வுகள் இயக்ககம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்வு முடிவுகளை விரைவாகவும் துல்லியமாகவும் வெளியிடக் கல்வித்துறை பின்வரும் கால அட்டவணையைத் தயார் செய்துள்ளது: வரும் மார்ச் 26ம் தேதி அன்று தேர்வுகள் அனைத்தும் முடிகின்றன. மார்ச் 28 முதல் விடைத்தாள்கள் மண்டல மையங்களுக்குக் கொண்டு செல்லப்படும். ஏப்ரல் 4-ஆம் தேதி விடைத்தாள்கள் அந்தந்த மதிப்பீட்டு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். முதன்மைத் தேர்வாளர்கள் மதிப்பீடு ஏப்ரல் 8-ஆம் தேதி தொடக்கம். ஏப்ரல் 9 முதல் ஏப்ரல் 20 வரை தீவிரமாக விடைத்தாள் மதிப்பீடு நடைபெறும்.

நாளை மார்ச் 17ம் தேதி உயர்கல்விக்குத் திருப்புமுனையாக அமையும் கணிதம், உயிரியல், வணிகவியல், நுண் உயிரியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
