மேற்காசியப் போர்: பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம்!

 
மோடி ஆலோசனை மோடி ஆலோசனை

மத்திய கிழக்கு நாடுகளில் (மேற்காசியா) போர் பதற்றம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ள சூழலில், நாட்டின் எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது.

ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையேயான நேரடி மோதலால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கத்திலிருந்து இந்தியாவைப் பாதுகாக்கப் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவையின் பாதுகாப்புத் துணைக் குழு ஆலோசனையில் ஈடுபட்டது.

ஹார்முஸ் ஜலசந்தி பாரசீக வளைகுடா இந்தியக் கப்பல்

பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா (உள்துறை), ராஜ்நாத் சிங் (பாதுகாப்பு), ஜே.பி. நட்டா (சுகாதாரம்), சிவராஜ் சிங் சவுகான் (வேளாண்மை), நிர்மலா சீதாராமன் (நிதி) மற்றும் ஜெய்சங்கர் (வெளியுறவு) உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முக்கியத் துறைச் செயலாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டம் பெட்ரோல் & கச்சா எண்ணெய்: கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் விநியோகத் தடையைச் சமாளிப்பது, சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாமல் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வது,  எரிவாயு பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்க நிலக்கரி இருப்பை அதிகரிப்பது, விவசாயத்திற்குத் தேவையான உரங்கள் (யுரியா போன்றவை) தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வது மற்றும் சரக்குப் போக்குவரத்து மற்றும் கடல்வழிப் பாதைகளில் ஏற்பட்டுள்ள முடக்கத்தைத் தவிர்க்க மாற்று வழிகளை ஆராய்வது என குறிப்பாக 5 துறைகளில் நிலவும் சூழலை ஆய்வு செய்ய நடத்தப்பட்டது.

கப்பல்

இந்தப் போர்ச் சூழலைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் அடங்கிய ஒரு பிரத்யேகக் குழுவை அமைக்கப் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். கச்சா எண்ணெய் மற்றும் உர இறக்குமதிக்கு மத்திய கிழக்கு நாடுகளைத் தாண்டி மற்ற நாடுகளிலிருந்து (உதாரணமாக ரஷ்யா) இறக்குமதி செய்வதை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இயற்கை எரிவாயு விநியோகத்தில் உர உற்பத்தி மற்றும் வீட்டு உபயோகச் சமையல் எரிவாயுவிற்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து போர் தீவிரமடைந்தது. தற்போது ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பதால், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட சவாலாகப் பார்க்கப்படுகிறது.