'சிஜி செமி' செமிகண்டக்டர் தொழிற்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

 
செமி கண்டெக்டர்

இந்தியாவை உலகளாவிய மின்னணு மற்றும் தொழில்நுட்ப உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கில், குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள 'சிஜி செமி' நிறுவனத்தின் புதிய செமிகண்டக்டர் உற்பத்தித் தொழிற்சாலையைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

மின்னணு சாதனங்களின் இதயமாக விளங்கும் சிப்கள் மற்றும் செமிகண்டக்டர்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்காக மத்திய அரசு கொண்டு வந்த 'செமிகான் இந்தியா' திட்டத்தின் கீழ் இத்தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. டாடா குழுமம் மற்றும் மைக்ரான் நிறுவனங்களின் முதலீடுகளைத் தொடர்ந்து, இத்தொழிற்சாலையானது இந்தியாவின் 'சிஜி பவர்' நிறுவனம், ஜப்பான் மற்றும் தாய்லாந்து நாடுகளின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ள சர்வதேசக் கூட்டு முயற்சியின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

சனந்த் வளாத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன ஆலை, முதற்கட்டமாகச் செமிகண்டக்டர் அசெம்பிளி, சோதனை மற்றும் பேக்கேஜிங் பணிகளைச் சர்வதேசத் தரத்துடன் மேற்கொள்ளவுள்ளது.

புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையைத் திறந்து வைத்துப் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "இந்தச் செமிகண்டக்டர் ஆலை இந்தியாவின் தொழில்நுட்பச் சுயாட்சிக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகும். நாட்டை உலகளாவிய செமிகண்டக்டர் சப்ளை செயினில் ஒரு முக்கிய மையமாக மாற்றுவதோடு, வரும் 2047-ஆம் ஆண்டிற்குள் 'வளர்ந்த இந்தியா'  என்ற இலக்கை எட்டுவதற்கு இதுபோன்ற அதிநவீனத் தொழிற்சாலைகளின் பங்களிப்பு மிக இன்றியமையாததாகும்."

தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த 'சிஜி செமி' செமிகண்டக்டர் ஆலை மூலம் குஜராத் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளம் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்குப் புதிய அதிநவீன வேலைவாய்ப்புகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் உருவாகவுள்ளன.

உலகளவில் செமிகண்டக்டர் பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், இந்தியாவின் இந்த உள்நாட்டு உற்பத்தித் தொடக்கம் வாகன உற்பத்தி, ஸ்மார்ட்போன் மற்றும் பாதுகாப்புத் துறைச் சார்ந்த மின்னணுத் தேவைகளுக்குப் பெரும் பக்கபலமாக அமையும் எனத் தொழிற்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.