114 பதக்கங்களுடன் திரும்பிய இந்திய பாரா வீரர்கள்! இன்று பிரதமர் மோடி நேரில் சந்திப்பு
ஜப்பானில் நடைபெற்ற 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த இந்திய வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 5) நேரில் சந்திக்கிறார்.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் மாலை 4.30 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய அணியினருடன் பிரதமர் கலந்துரையாடுவதுடன், நிகழ்ச்சியில் உரையாற்றவும் உள்ளார்.
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற இப்போட்டிகளில் இந்தியா இதுவரை இல்லாத அளவிலான சாதனையைப் பதிவு செய்துள்ளது. 97 இந்திய பாரா விளையாட்டு வீரர்கள் மொத்தம் 114 பதக்கங்களை வென்றுள்ளனர். இதில் 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.
இந்த நிகழ்ச்சியில் வீரர்களுடன் பயிற்சியாளர்கள், இந்திய பாராலிம்பிக் கமிட்டி மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்க அதிகாரிகள், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சக அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.சர்வதேச அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த பாரா விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.
