நவராத்திரி தொடங்கியது! ‘கற்பூர நாயகியே’ தமிழ் பக்திப் பாடலைப் பகிர்ந்து பிரதமர் மோடி வாழ்த்து!

 
மோடி

 

நவராத்திரி விழாவின் தொடக்க நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்னை சைலபுத்திரியை வணங்கி, மக்களின் வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவ வேண்டும் என அவர் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.நவராத்திரி விழா நாடு முழுவதும் இன்று (அக்டோபர் 11) தொடங்கியுள்ளது. இந்த விழாவின் முதல் நாளில் அன்னை சைலபுத்திரி வழிபடப்படுகிறார். மலைகளின் மகளாகக் கருதப்படும் சைலபுத்திரி, துர்க்கையின் வடிவங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறார்.

இதையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பதிவில், நவராத்திரியின் புனிதத் தொடக்கத்தில் அமைதியின் அதிபதியான அன்னை சைலபுத்திரியின் பாதங்களில் கோடிக்கணக்கான வணக்கங்களைச் செலுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். அன்னையின் தெய்வீக அருள் அனைவரின் மனதிலும் பொறுமையையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கட்டும் என்றும், நாட்டு மக்கள் மீது அன்னையின் ஆசீர்வாதம் என்றும் நிலைத்திருக்கட்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.

மேலும், நவராத்திரி வாழ்த்துடன் தமிழ் பக்திப் பாடலான ‘கற்பூர நாயகியே’ பாடலையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களிலும் வீடுகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. பல வீடுகளில் கொலு அமைத்து மக்கள் நவராத்திரி விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.