நாடு முழுவதும் 14 வயது சிறுமிகளுக்கு இலவச HPV தடுப்பூசி - பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
இந்தியாவில் பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுகாதாரத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடைபெறவுள்ள விழாவில் நாளை மறுதினம் பிப். 28ம் தேதி சனிக்கிழமை காலை 11:30 மணியளவில் இந்த நாடு தழுவிய தடுப்பூசி முகாமைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
நாடு முழுவதும் 14 வயது பூர்த்தியான அனைத்துச் சிறுமிகளுக்கும் 'கார்டசில்-4' (Gardasil-4) என்ற HPV தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் முற்றிலும் இலவசமாகப் போடப்படும். உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி, இந்த வயதினருக்கு ஒரே ஒரு முறை (Single Dose) தடுப்பூசி செலுத்தினால் போதுமானது. இது வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பை வழங்கும்.

ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர், ஆரம்பச் சுகாதார நிலையங்கள், மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்தத் தடுப்பூசி கிடைக்கும். இந்தத் தொடக்க விழாவில் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநில முதலமைச்சர்களும், சுகாதார அமைச்சர்களும் தங்களது தலைமையகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் கலந்துகொள்ள உள்ளனர்.
புற்றுநோய் தடுப்பு: இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாகக் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 80,000 பெண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். 14 வயதிலேயே இந்தத் தடுப்பூசியைப் போடுவதன் மூலம், எதிர்காலத்தில் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை 90% வரை குறைக்க முடியும்.

இத்திட்டம் முற்றிலும் தன்னார்வ அடிப்படையிலானது. எனினும், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் எழுத்துப்பூர்வ அனுமதி அவசியம். 'U-WIN' என்ற டிஜிட்டல் தளம் மூலம் இதற்கான பதிவுகள் மேற்கொள்ளப்படும். இந்தத் திட்டம் ஏற்கனவே தமிழகத்தில் முன்னோடியாகச் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இது இந்தியப் பெண்களின் ஆரோக்கியத்தில் ஒரு 'போலியோ ஒழிப்புத் தருணம்' (Polio Moment) போன்ற ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
