ஏப்ரல் 4-ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி - சென்னையில் பிரம்மாண்ட ரோடு ஷோ - மயிலாப்பூரில் பிரச்சாரம்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யப் பிரதமர் மோடி அடுத்த வாரம் தமிழகம் வருகிறார்.
சென்னையில் உள்ள நட்சத்திரத் தொகுதிகளில் ஒன்றான மயிலாப்பூரில் பாஜக நேரடியாகக் களம் காண்கிறது. இங்குப் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து, ஏப்ரல் 4ம் தேதி மாலை பிரதமர் மோடி பிரம்மாண்டமான 'ரோடு ஷோ' அல்லது பொதுக்கூட்டத்தில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளார். பிரதமரின் வருகையை முன்னிட்டுச் சென்னையில் ஐந்தடுக்கு பாதுகாப்புப் போடப்படவுள்ளது. குறிப்பாக மயிலாப்பூர் மாட வீதிகள் மற்றும் காமராஜர் சாலை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையைத் தொடர்ந்து, ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் பிரதமர் மோடி தென் தமிழகத்தில் முகாமிட உள்ளார். பாஜகவின் கோட்டைகளாகக் கருதப்படும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் அவர் உரையாற்றுகிறார். ராமநாதபுரம் தொகுதியிலும் பிரதமர் மோடி ஒரு நாள் பிரச்சாரம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நாளைஅதிகாரப்பூர்வமாக டெல்லியில் இருந்து வெளியிடப்பட உள்ளது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட உடனேயே, பிரதமரின் வருகை தமிழக பாஜகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
