"பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்" - பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு வேண்டுகோள்!

 
மோடி இஸ்ரேல்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அசாதாரண சூழல் மற்றும் போர் பதற்றம் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். உலக நாடுகள் தங்களுக்கு இடையேயான மோதல்களைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 

இந்தியாவிற்கு 4 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னியை, பிரதமர் மோடி இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது மேற்காசியப் போர் குறித்துத் தனது நிலைப்பாட்டை அவர் விளக்கினார்.

அபுதாபி போர்

மேற்காசியாவில் (மத்திய கிழக்கு நாடுகள்) தற்போது நிலவி வரும் சூழல் இந்தியாவுக்கு மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். வன்முறை எதற்கும் தீர்வாகாது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், "மோதல்களுக்குத் தீர்வு காணப் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர ரீதியிலான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார். பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறைப் போக்கு ஆகியவை உலகிற்கே மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளன. இதனை ஒடுக்க உலக நாடுகள் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். அமைதியான முறையில் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது என்பதே இந்தியாவின் நீண்டகால மற்றும் உறுதியான நிலைப்பாடு என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு முன்னதாக மும்பையில் பேசிய கனடா பிரதமர் மார்க் கார்னி, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமற்ற நிலைக்கு ஈரானே காரணம் என்று குற்றம் சாட்டினார். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களைத் தயாரிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியா மற்றும் கனடா இடையே கடந்த காலங்களில் நிலவிய சில கசப்பான சம்பவங்களுக்குப் பிறகு, பிரதமர் மார்க் கார்னியின் இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தில் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் உலகளாவிய அமைதி குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசித்துள்ளனர்.